இந்தியாவில் 64 நாட்களில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது: பலி எண்ணிக்கை 3,163 ஆக உயர்வு
இந்தியாவில் 64 நாட்களில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100-ல் இருந்து 1 லட்சத்தை, 64 நாட்களில் எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்துக்குள் 4,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,139 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 3,163 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. 58,802 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 12,448 பேரும், குஜராத்தில் 11,746 பேரும், டெல்லியில் 10,554 பேரும், ராஜஸ்தானில் 5,757 பேரும் மத்திய பிரதேசத்தில் 5,236 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 4,748 பேரையும், மேற்குவங்காளத்தில் 2,825 பேரையும், ஆந்திராவில் 2,489 பேரையும், பஞ்சாபில் 1,980 பேரையும், தெலுங்கானாவில் 1,592 பேரையும், பீகாரில் 1,495 பேரையும், கர்நாடகாவில் 1,395 பேரையும், ஜம்மு காஷ்மீரில் 1,289 பேரையும், கொரோனா பாதித்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழே உள்ளது.
இந்தியாவில் 100-ல் இருந்து 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 64 நாட்கள் எடுத்துக்கொண்ட கொரோனா, பிற வளர்ந்த நாடுகளில் குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பேரை பாதித்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவில் 25 நாட்களிலேயே கொரோனா இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் 30 நாட்களிலும், ஜெர்மனியில் 35 நாட்களிலும், இத்தாலியில் 36 நாட்களிலும்,, பிரான்சில் 39 நாட்களிலும், இங்கிலாந்தில் 42 நாட்களிலும் கொரோனா 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த புள்ளி விவரம், அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதையும், இந்தியா, இங்கே தொற்று பரவுவதை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது என்பதையும் காட்டுகிறது.
Related Tags :
Next Story