புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் தர்ணா: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று உ.பி. காங்கிரஸ் தலைவர் கைது மேலும் சில மூத்த தலைவர்களும் கைது


புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் தர்ணா: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று உ.பி. காங்கிரஸ் தலைவர் கைது மேலும் சில மூத்த தலைவர்களும் கைது
x
தினத்தந்தி 20 May 2020 10:15 PM GMT (Updated: 20 May 2020 9:59 PM GMT)

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர தங்கள் பஸ்களை அனுமதிக்கக்கோரி, தர்ணா நடத்திய உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டார். மேலும் சில மூத்த தலைவர்களும் கைதாகினர்.

ஆக்ரா, 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேட்டுக்கொண்டார். இதற்காக காங்கிரஸ் கட்சி ஆயிரம் பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

அதை யோகி ஆதித்யநாத் ஏற்றுக்கொண்டார். தலை நகர் லக்னோவுக்கு பஸ்களை அனுப்புமாறு கூறியபோது, உ.பி. எல்லையில் ஒப்படைப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியது. அரசு கேட்டுக்கொண்டபடி, ஆயிரம் பஸ்களின் பதிவெண்கள், டிரைவர் பெயர்களை அனுப்பி வைத்தது.

ஆனால், அவற்றில் நூறு பதிவெண்கள், கார், ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்களின் பதிவெண்கள் என்று உத்தரபிரதேச அரசு செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டினார். பஸ்களிலும் 297 பஸ்களுக்கு உரிய தகுதி சான்றிதழோ, காப்பீடோ இல்லை என்றும் அவர் கூறினார்.

எனவே, ஏமாற்றுதல், ஆவண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, பிரியங்காவின் தனி செயலாளர் சந்தீப்சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இக்குற்றச்சாட்டை மறுத்த காங்கிரஸ் கட்சி, பஸ்களை நேரில் பார்த்து பரிசோதிக்குமாறு தெரிவித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, மூத்த நிர்வாகிகளுடன் ஆக்ராவுக்கு விரைந்தார். எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் கட்சியின் பஸ்களை ஆக்ராவுக்குள் நுழைய அனுமதி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அவரை 4 போலீஸ்காரர்கள், குண்டுக்கட்டாக தூக்கி ஒரு காரில் ஏற்றினர். அவர் பதேபூர் சிக்ரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரதீப் மாத்தூர், விவேக் பன்சால், மனோஜ் தீட்சித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் லாக்-அப்பில் வைக்கப்பட்டனர். அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு வருமாறு:-

879 பஸ்கள் உள்ளன. அவற்றின் தகுதியை பரிசோதிக்கும் பணியை மாநில அரசு செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவு வதில் முட்டுக்கட்டை போடக் கூடாது. வேண்டுமானால், அந்த பஸ்களில் பா.ஜனதாவின் பேனர்களை கட்டுகிறோம். ஆனால், அவற்றை ஓட அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story