நிபந்தனைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி: அமித்ஷா தகவல்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மற்றும் மாநில பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. அதே சமயத்தில், இந்த தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஏராளமான மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, பள்ளிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுத்தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, அந்த தேர்வுகளை நடத்த அனுமதி தருமாறு மாநில அரசுகளும், சி.பி.எஸ்.இ.யும் கேட்டுக்கொண்டன.
அதை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்தது. ஏராளமான மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு, சில நிபந்தனைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.
தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன்பு அனைவருக்கும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மையத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வருவதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அஜய் பல்லா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story