இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,088 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்வு


இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,088 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 May 2020 11:45 PM GMT (Updated: 22 May 2020 8:51 PM GMT)

இந்தியாவில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 6,088 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 6,088 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதற்கு முன்பு கடந்த 20-ந்தேதி 5,611 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.

புதிதாக ஏற்பட்ட பாதிப்புடன் சேர்த்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் 148 பேரின் உயிரையும் ஒரே நாளில் பறித்து இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டும் 64 பேர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 24 பேரும், டெல்லியில் 18 பேரும், உத்தரபிரதேசத்தில் 11 பேரும், தமிழகத்தில் 7 பேரும், மேற்குவங்காளத்தில் 6 பேரும், தெலுங்கானாவில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், மத்தியபிரதேசத்தில் 3 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 2 பேரும், பீகார், ஒடிசா, அரியானா மற்றும் பஞ்சாபில் தலா ஒருவரையும் ஒரே நாளில் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,583 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48,534 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 66,330 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் மட்டும் ஒரே நாளில் 2,345 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,642 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 14,753 பேரையும், குஜராத்தில் 12,905 பேரையும், டெல்லியில் 11,569 பேரையும், ராஜஸ்தானில் 6,227 பேரையும், மத்தியபிரதேசத்தில் 5,981 பேரையும், உத்தரபிரதேசத்தில் 5,515 பேரையும், மேற்குவங்காளத்தில் 3,197 பேரையும், ஆந்திராவில் 2,647 பேரையும், பஞ்சாபில் 2,028 பேரையும், பீகாரில் 1,982 பேரையும், தெலுங்கானாவில் 1,699 பேரையும், கர்நாடகாவில் 1,605 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 1,449 பேரையும், ஒடிசாவில் 1,100 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாக அரியானாவும் இணைந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு 700-ஐ நெருங்கிவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 300-க்கும் குறைவாக உள்ளது.

Next Story