ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிமுறைகளை வெளியிட்டது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு நிவாரணம் தேடித்தர டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்தால், வைரசின் அளவு குறைந்து போகிறது என தெரிய வந்தது.
அதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகள் இந்த மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து குவித்துள்ளன. அந்த நாடுகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த மாத்திரைகளை தந்து பரிசோதித்து வருகிறார்கள்.
இந்த மருந்தை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அறிகுறியற்ற அனைத்து சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதி செய்யப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது என்பது தொடர்பான புதிய வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* முதலில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு தவறான பாதுகாப்பு உணர்வை, அதாவது கொரோனா வைரஸ் கண்டிப்பாக பாதிக்காது என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது.
* சுகாதார சேவைகள் இயக்குனரகம் தலைமையில், எய்ம்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் வல்லுனர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக்குழு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்துவது குறித்து மதிப்பாய்வு செய்தனர்.
இந்த மதிப்பாய்வைத் தொடர்ந்துதான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.
யாருக்கெல்லாம் தரலாம்?
* கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாத ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகிற சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் நோயாளிகளை கொண்டுள்ள ஏரியா ஆஸ்பத்திரிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு பணியாளர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ, போலீஸ் துறையினர் என கொரோனா வைரஸ் அறிகுறியற்ற அனைவருக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தடுப்பு மருந்தாக தரலாம்.
யாருக்கு தரக்கூடாது?
* புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பு செயல்திறனுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தருவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்த மாத்திரைகளை தொற்றுநோயை குறைப்பதை காட்டி உள்ளது. மேலும் சார்ஸ்-கோவ் 2-ன் வைரஸ் ஆர்.என்.ஏ. நகலில் பதிவை குறைத்தது. மேலும் ரெட்டினோபதி என்னும் கண்நோய், இதய கோளாறுகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு அதிக உணர்திறன் பிரச்சினை உடையவர்கள் (ஒத்துக்கொள்ளாதவர்கள்) ஆகியோருக்கு இந்த மருந்து தரக்கூடாது. 15 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பு மருந்தாக கொடுக்கக்கூடாது.
* இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மிகவும் அபூர்வமாக இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது இதயத்துடிப்பில் பிரச்சினை, இதய தசை நோய் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அப்படி ஏற்படுத்துவது தெரிய வந்தால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும். தொடரக்கூடாது. இதேபோன்று இந்த மாத்திரைகள் கண்பார்வையை மங்கலாக்கலாம். அவர்களும் நிறுத்தி விட வேண்டும்.
* சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கூறி அவர்களின் சம்மதத்துடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின்கீழ் தரப்பட வேண்டும்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தடுப்பு மருந்தாக பயன்படுத்த 1,323 பேருக்கு கொடுத்து சோதிக்கப்பட்டது. அதில் 8.9 சதவீதம் பேருக்கு குமட்டல், 7.3 சதவீதம் பேருக்கு அடிவயிற்றில் வலி, 1.5 சதவீதத்தினருக்கு வாந்தி, 1.7 சதவீதம்பேருக்கு ரத்த சர்க்கரை குறைவு, 1.9 சதவீதம் பேருக்கு இதயக்கோளாறுகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
* இந்தியாவின் மருந்து கண்காணிப்பு திட்டத்தின் தரவுகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் 214 பேருக்கு மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதை காட்டுகின்றன.
* ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின்பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். ஏதாவது எதிர்விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
* தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறபோது, யாருக்காவது கொரோனா அறிகுறி தோன்றினால் உடனடியாக டாக்டர்களை நாடி விட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை செய்து விட வேண்டும். தேசிய வழிகாட்டும் நெறிமுறைகள்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் பிரச்சினை போன்ற அறிகுறிகளுடன் யாருக்கேனும் வேறு அறிகுறிகள் இருந்தாலும் அதற்கு சிகிச்சை பெற்று விட வேண்டும்.
இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
Related Tags :
Next Story