ஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல்


ஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 10:45 PM GMT (Updated: 23 May 2020 10:45 PM GMT)

ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

புதுடெல்லி, 

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல், நாடு முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், ‘பேஸ்புக்’ மூலம் நேற்று கலந்துரையாடிய ஹர்தீப் சிங் பூரியிடம், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று தான் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும், முழு அளவில் இயக்க முடியாவிட்டாலும் கணிசமான விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்க முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் எந்த தேதியில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்டு அல்லது செப்டம்பருக்குள் தொடங்க முடியுமா? என சிலர் கேட்கலாம். சூழ்நிலை சாதகமாக அமைந்தால் அதற்கு முன்பே கூட தொடங்க முடியும் என்பதுதான் தனது பதில் என்றும் அப்போது ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

Next Story