இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 3,720 ஆக உயர்வு
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பலி எண்ணிக்கையும் 3,720 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி,
சீனாவில் உருவாகி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4-வது கட்டமாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்களே உள்ளன.
ஆனால் ஊரடங்குக்கு மத்தியிலும் கொரோனா தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமானவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 2-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் அதிகபட்சமாக நேற்றுமுன்தினம் 6,088 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த எண்ணிக்கையை நேற்றைய பாதிப்பு முறியடித்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், ஒரே நாளில் 6,654 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு சேர்த்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 137 பேரின் உயிரையும் இந்த கொரோனா வைரஸ் பறித்துள்ளது. இதனால் இந்த நோய்த்தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 3,720 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1,517 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. குஜராத்தில் 802 பேரும், மத்தியபிரதேசத்தில் 272 பேரும், மேற்குவங்காளத்தில் 265 பேரும், டெல்லியில் 208 பேரும், ராஜஸ்தானில் 153 பேரும், உத்தரபிரதேசத்தில் 152 பேரும், தமிழகத்தில் 103 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் சாவு எண்ணிக்கை 100-க்கு குறைவாக உள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த மராட்டிய மாநிலமே பாதிப்பிலும் முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 15,500-ஐ தாண்டிவிட்டது. குஜராத்தில் 13,268 பேரையும், டெல்லியில் 12,319 பேரையும், ராஜஸ்தானில் 6,494 பேரையும், மத்திய பிரதேசத்தில் 6,170 பேரையும், உத்தரபிரதேசத்தில் 5,735 பேரையும், மேற்குவங்காளத்தில் 3,332 பேரையும், ஆந்திராவில் 2,709 பேரையும், பீகாரில் 2,177 பேரையும், பஞ்சாபில் 2,029 பேரையும், தெலுங்கானாவில் 1,761 பேரையும், கர்நாடகாவில் 1,743 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 1,489 பேரையும், ஒடிசாவில் 1,189 பேரையும், அரியானாவில் 1,067 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்து வந்தநிலையில், கடந்த சில தினங்களாக அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளான 42 பேரையும் சேர்த்து, மொத்த பாதிப்பு 732 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 400-க்கு கீழே உள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,25,101 பேரில், சுமார் 41 சதவீதம் பேர் அதாவது 51,783 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story