சென்னை உள்பட 11 மாநகராட்சி பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிக்கை
கொரோனா தொற்றை சமாளிக்க சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்றை சமாளிக்க சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்து இருக்கிறது.
54 ஆயிரத்து 440 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். அதாவது 41.28 சதவீதம் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சி பகுதிகளில் உள்ளனர். (தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக சென்னை மாநகராட்சி பகுதி விளங்குகிறது)
இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் பிரீத்தி சுதன் நேற்று முன்தினம் மேற்கண்ட 11 மாநகராட்சிகளின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, உரிய சிகிச்சை அளித்து உயிர் இழப்புகளை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேற்கண்ட 11 மாநகராட்சிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. தேசிய சராசரியை விட இங்கு அதிகமான பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி விடுகிறது.
எனவே அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா தொற்றை சமாளிக்க தயாராக இருக்கும் வகையில் இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைப்பது, வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆய்வகங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து சளி மாதிரிகளை சேகரிப்பது, தாமதம் இன்றி பரிசோதனை நடத்துவது போன்றவற்றை விரைவுபடுத்த வேண்டும்.
மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகள், குடிசைப்பகுதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படாத மாநகராட்சி பகுதிகளில் அமைத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story