புதுச்சேரியில் விலை உயர்வுடன் மது விற்பனை தொடங்கியது


புதுச்சேரியில் விலை உயர்வுடன் மது விற்பனை தொடங்கியது
x
தினத்தந்தி 25 May 2020 6:26 AM GMT (Updated: 25 May 2020 6:26 AM GMT)

புதுச்சேரியில் விலை உயர்வுடன் மது விற்பனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி அமலானது.  தொடர்ந்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  ஊரடங்கில் கடந்த 4ந்தேதி முதல் தளர்வுகள் வெளியாக தொடங்கின.  இதன்பின்னர் கர்நாடகம், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகளுடன் மதுவிற்பனை தொடங்கியது.

புதுச்சேரியில் மதுவிற்பனை இன்று காலையில் தொடங்கியது.  ஊரடங்கு விதிக்கப்பட்டு ஏறக்குறைய 60 நாட்களுக்கு பின்னர் மது விற்பனை தொடங்கிய நிலையில், மது வாங்க வருவோர் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்தது.

ஊரடங்கை தொடர்ந்து, மது வாங்க வருவோர் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.  கடைக்காரர்கள் கிருமி நாசினி தெளிப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே விதமான 154 வகை மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் இவற்றின் விலை ஒரே விதமாக இருக்கும். தமிழ்நாட்டில் கிடைக்காத மற்ற வகை மதுபானங்களுக்கு 25 சதவீதம் கொரோனா வரி விதிக்கப்படுகிறது.

சாராயத்துக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. கள்ளுக்கடைகளுக்கு கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படவில்லை. 20 மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து 102 மதுபான கடைகளை திறக்க அனுமதி இல்லை. மதுக்கடை திறப்பின் போது ஒவ்வொரு கடை முன்பும் திருத்தப்பட்ட விலை பட்டியலை கடைக்காரர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மது விற்பனை இருக்கும்.  இதேபோன்று மது வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Next Story