எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள்.
இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது.
இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை.
சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது.
Related Tags :
Next Story