மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு


மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் -  மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 12:26 PM GMT (Updated: 29 May 2020 12:26 PM GMT)

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில்  நாடு முழுவதும் கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என தெரிவித்துள்ளார். அம்பன் புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story