கொரோனா பயத்தால் தனி விமான சேவை பாதிப்பு: 2 விமான சேவையை மட்டுமே ஏர் ஏசியா வழங்கியது


கொரோனா பயத்தால் தனி விமான சேவை பாதிப்பு: 2 விமான சேவையை மட்டுமே ஏர் ஏசியா வழங்கியது
x
தினத்தந்தி 1 Jun 2020 4:00 AM IST (Updated: 1 Jun 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பயத்தால் தனி விமான சேவை பாதிக்கப்பட்டது. மேலும் 2 விமான சேவையை மட்டுமே ஏர் ஏசியா வழங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவிவிடுமோ என்ற பயத்தால் தனி விமானங்கள் அமர்த்துவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் அதன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் ஏசியா நிறுவனம் 2 விமான சேவைகளை மட்டுமே வழங்கி உள்ளது.

கொரோனா மனித வாழ்வை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு பின்னர் கடந்த 25-ந் தேதி விமான சேவை தொடங்கி உள்ளது. ஆனாலும் கொரோனா பயத்தால் உள்நாட்டில் தனி விமானங்களை அமர்த்தி, அதன் சேவையை பயன்படுத்த வரவேற்பு இல்லை.

தனி விமானங்கள் இயக்கப்பட்டது கூட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களில் கொண்டு போய்ச்சேர்க்கத்தான்.

தனி விமான சேவை தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து நிர்வாகிகள் கூறுகையில், “இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களான டெல்லி, மும்பை விமான நிலையங்கள் 2 அல்லது 3 தனி விமானங்களைத்தான் ஊரடங்குக்கு பின் 25-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை கையாண்டுள்ளன” என தெரிவித்தனர்.

ஆனால் ஊரடங்கு காலத்துக்கு முன்பாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து சராசரியாக 30 தனி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன; மும்பை விமான நிலையத்தில் இருந்து 50 விமானங்கள் கையாளப்பட்டுள்ளன என அவர்கள் கூறினர்.

மார்ச் 25-ந் தேதி முதல் கடந்த 24-ந் தேதி வரை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கிற வகையில் உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்தை அனுமதிக்கவில்லை என்றபோதிலும், ஆம்புலன்ஸ் விமான சேவை அனுமதிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து திங்கட்கிழமை முதல் இயக்கப்பட்ட தனி விமானங்களில் பெரும்பாலானவை, அதே நாளில் திரும்பி விட்டன. விமான கேபின் குழுவினர், கட்டாய தனிமைப்படுத்தலை தவில்க்க விரும்பியதே இதற்கு காரணம் ஆகும்.

விமானங்களில் பறக்கிறபோது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று விதிகள் இருப்பதால், தனி விமானஙக்ளை அமர்த்துவதை பணக்காரர்கள் தவிர்க்கின்றனர் என்று சிவில் விமான போக்குவரத்து நிர்வாகிகள் கூறுகின்றனர்.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, விமானத்தில் செல்கிறவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதிருக்கிறது. இதிலும் நிறுவன ரீதியில் தனிமைப்படுத்துதல், வீட்டில் தனிமைப்படுத்துதல் என கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தனி விமான சேவையை பெரிதும் பாதித்துள்ளது.

“பொதுவாக தனி விமானங்களை பணக்காரர்கள்தான் அமர்த்துவர். அவர்கள் சிறிய ரக விமானங்களை அமர்த்துவார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அவர்களிடம் விமானங்களை அமர்த்த பயம் வந்துவிட்டது, மற்ற பயணிகளைப்போலவே அத்தியாவசிய பயணம் மட்டுமே விமானத்தில் மேற்கொண்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர்” என்று சிவில் விமான போக்குவரத்து நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சொந்த மாநிலங்களில் கொண்டு போய்ச்சேர்க்க ஏர் ஏசியா நிறுவனம் 2 தனி விமானங்களை மட்டும் இயக்கி உள்ளது.

ஒரு விமானம் மும்பையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு 160 தொழிலாளர்களை கொண்டு விடுவதற்கு சென்றது. இந்த விமான சேவைக்கு பெங்களூரு தேசிய சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

மற்றொரு தனி விமானம் கொச்சியில் இருந்து ஒடிசா மாநில தலைநகர் புவனேசுவரத்துக்கு சென்றது. அதில் 167 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை பிரபல நடிகர் சோனு சூத் செய்திருந்தார்.

180 இருக்கைகளை கொண்ட ஏ320 ரக பயணிகள் விமானத்துக்கு மணிக்கு ரூ.4 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவலாக அமைகிறது.

மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்த 2 வாரங்களில் 7 விமானங்களை கையாள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும், சவுதி அரேபியாவிலும் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர செல்கின்றன. இது ‘வந்தோபாரத்’ திட்டத்தின் கீழ் அல்ல.

இந்த விமானங்களை வளைகுடா நாட்டைச்சேர்ந்த பணக்காரர்கள் அமர்த்தி உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

தனி விமானங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது பயணிகள் விமான நிறுவனங்களுக்கு கவலை அளிக்கத்தக்க அம்சமாக அமைந்து விட்டது.

Next Story