“கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டது” - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்ற முறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்பு கொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன.
தற்போது இவற்றில் பல சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, விமான சேவையும் தொடங்கப்பட்டு உள்ளது. இனி சிறிது சிறிதாக அனைத்து தொழில்களும் செயல்பட தொடங்கி விடும்.
அதாவது நம்முடைய பொருளாதாரத்தின் ஒரு பெரும் பகுதி தற்போது இயங்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் நாம் மேலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிறோம். இந்த போர் மிகவும் நீண்டது. பிற உலக நாடுகளை பார்க்கும் போது, உள்ளபடியே இந்தியர்களாகிய நாம் படைத்திருக்கும் சாதனை எத்தகையது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலான நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் கொரோனாவின் பாதிப்பும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவுதான்.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கு பெரிதும் துக்கம் அளிப்பது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மன உறுதி இந்த போரில் நமக்கு துணையாக இருந்து வந்தது.
சங்கடங்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் வெளிவரும் புதுமையான கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறு வியாபாரிகள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள், பரிசோதனைக்கூடங்கள் என பலரும் பல இடங்களில் பல வகைகளில் கொரோனாவுக்கு எதிரான போரில் பல வகையான புத்தம்புதிய கண்டுபிடிப்புடன் வருகின்றனர். இது நம்முடைய கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை நடைபெற்றுவரும் ஒரு அற்புதமான நிகழ்வு.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பாக நமது ஆய்வுக்கூடங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுகள் மீது உலக நாடுகளின் கண்கள் அனைத்தும் பதிந்து உள்ளன. நமது எதிர்பார்ப்புகளும் இந்த ஆய்வுக்கூடங்கள் மீது அதிகம் இருக்கின்றன.
எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்ற வேண்டும் என்றால், ஆர்வம் மட்டும் இன்றி மிகப்பெரிய அளவில் புதுமையான சாதனங்களை கண்டுபிடிப்பதும் அவசியமாகிறது. இந்த பெருந்தொற்றிடம் இருந்து நாம் வெற்றி காண வேண்டுமென்றால், அதற்கு இந்த சிறப்பான கண்டுபிடிப்புகள் மிகவும் உறுதணையாக இருக்கும்.
கொரோனாவுக்கு எந்த ஒரு சிகிச்சையும் இல்லை என்பதோடு, யாருக்கும் இதைபற்றிய முன் அனுபவமும் ஏதும் இல்லை. இந்த நிலையில், புதிய சவால்களும், அவை நமக்கு உண்டாக்கும் சிரமங்களும் நம்மை அவதிக்குள்ளாக்கி வருகின்றன. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது.
எனவே, இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் இடர்களையோ, துயர்களையோ அனுபவிக்காத பிரிவினர் யாரும் நம் நாட்டில் இல்லை. ஏழைகள், தொழிலாளர்கள், கூலிவேலை செய்வோர் ஆகியோர் மீதுதான் இந்த பெருந்தொற்றின் தாக்கம் அதிகம் படிந்திருக்கிறது. ரெயில்வேயில் பணிபுரியும் நமது நண்பர்கள் இரவு-பகலாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், உள்ளாட்சி அமைப்புகளாகட்டும் அனைவருமே இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு வகையில் முதல் வரிசையில் போராடிவரும் கொரோனா போராளிகள் தாம். லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளிகளை, ரயில்களில், பேருந்துகளில், பாதுகாப்பாகக் கொண்டு செல்வது, அவர்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்வது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கான ஏற்பாடுகளை செய்வது, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவது, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என அனைத்து பணிகளும் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றன.
கொரோனாவால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தாருக்கோ பாதிப்பு ஏற்படலாம். நாம், ஒவ்வொரு மனிதனின் உயிரையும் பாதுகாக்க வேண்டும்; ஆகையால் ஒரு மீட்டர் இடைவெளி, முகத்தில் முகக்கவசம், கைகளை கழுவுதல் ஆகிய இந்த முன்னெச்சரிக்கைகளை, இதுவரை நாம் செய்ததைப் போலவே செய்து வரவேண்டும். நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் உற்றாருக்காகவும், நமது நாட்டுக்காகவும் இந்த முன்னெச்சரிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பார்க்கும் வேளையில், மேலும் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் உழைப்பாளர்களின் திறன் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆணையம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்சார்பு பாரதம் தொடர்பாக, இன்று நாடு முழுவதிலும் பரவலான வகையில் கருத்தாய்வு நடைபெற தொடங்கி விட்டது. மக்கள் இப்போது இந்த இயக்கத்தை தங்களுடையதாக்கிக் கொள்ள தலைப்பட்டு விட்டார்கள். இந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்பதை நாட்டுமக்கள் தங்கள் பொறுப்பாக்கிக் கொண்டு வருகிறார்கள். தங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியலைத் தயார் செய்து விட்டதாக பலர் கூறுகிறார்கள். இவர்கள் இப்போது இந்த உள்ளூர் பொருட்களையே வாங்க தொடங்கி விட்டார்கள், மேலும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.
கொரோனா சங்கடத்தை நாம் சந்தித்து வரும் இந்த வேளையில், உலகநாடுகளின் தலைவர்கள் பலரோடும் பேசினேன். அவர்களுக்கு ஆயுர்வேதம், யோகாசனம் பற்றிய ஆர்வம் அதிகரித்து இருப்பதை என்னால் இந்த உரையாடல்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த காலட்டத்தில் யோகாசனமும், ஆயுர்வேதமும் எப்படி உதவிகரமாக இருக்கும் என்று சில தலைவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள்.
யோகக்கலை ஏன் மிக முக்கியமானது என்றால், இந்த நோய்க்கிருமி நமது சுவாச மண்டலத்தை அதிக அளவு பாதிக்கிறது. யோகக் கலையில் நம்முடைய சுவாச மண்டலத்தை மேலும் வலுவடையச் செய்யும் பலவகையான மூச்சுப் பயிற்சிகள் இருக்கின்றன; இவற்றின் பயன்களை நாம் நீண்ட காலமாகவே கண்டு வருகிறோம். ஆயுஷ் அமைச்சகம், ‘என் வாழ்க்கை, என் யோகக்கலை‘ என்ற தலைப்பில் இணையத்தில் யோகக்கலை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளலாம். இதில் பங்கெடுத்துக் கொள்ள, நீங்கள் உங்களின் 3 நிமிட வீடியோவை பதிவேற்ற வேண்டும். மேலும் யோகக்கலையால் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் கூற வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி விட்டது. ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகள், அதாவது நாட்டின் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது பயன்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் பயனாளிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் சங்கடம் தீர்க்கும் திட்டமாக மலர்ந்திருக்கிறது. புதுச்சேரியைச் சேர்ந்த அமிர்தவல்லியின் கணவர் துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பால் காலமாகி விட்டார். அவர்களுடைய 27 வயது நிரம்பிய மகனான ஜீவாவுக்கும் இருதய நோய் கண்டிருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் தினக்கூலி வேலை பார்த்துவரும் ஜீவாவால் இவ்வளவு பெரிய செலவு செய்வது என்பது சாத்தியமானதாக இல்லை. தாய் அமிர்தவல்லியோ தன் மகனை கைவிடுவதாக இல்லை. அவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்தார், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
ஒரு புறம் கிழக்கு பாரதம் பயங்கர சூறாவளியை எதிர்கொள்ள நேர்ந்தது என்றால், மறுபுறமோ நாட்டின் பல பாகங்களில் வெட்டுக்கிளிகளின் பயங்கர தாக்குதல். வெட்டுக்கிளிப் படையின் படுபயங்கர தாக்குதல் பலநாட்கள் வரை நீடிக்கக்கூடியது. இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் நவீன வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றன. நாம் அனைவரும் இணைந்து நமது விவசாயத்துறையை பாதித்திருக்கும் இந்த சங்கடத்தை எதிர்கொள்வோம் இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story