இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
கொரோனாவால் உலக நாடுகள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்வதற்காகவே இத்தகைய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமான பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அன்று முதல் எல்லையில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு வழியாக பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் நேற்று அதிகாலையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி 3 பேரையும் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருவதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story