இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆணுறை இலவச வினியோகம்: தேவையற்ற கர்ப்பங்களை தடுக்க நடவடிக்கை
பீகார் மாநிலத்தில் தேவையற்ற கர்ப்பங்களை தடுக்கும் வகையில், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக ஆணுறை வினியோகம் செய்கிறது.
பாட்னா,
கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர். அந்த வகையில், பீகார் மாநிலத்திற்கு லட்சக்கணக்கான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அதற்கான மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
14 நாட்கள் ஆன நிலையில் 8 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்படட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 5 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இத்தகைய தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர்.
இந்த நிலையில் பீகாருக்கு திரும்புகிற இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களை பதிவு செய்து தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்ந்தது முடிவுக்கு வருகிறது. இனி அங்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளத்தேவையில்லை. நிறுவன ரீதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தவும் தேவையில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச்செயலாளர் பிரத்யாயா அம்ரித் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “ யார் வேண்டுமானாலும் பஸ், ரெயில் மற்றும் பிற வாகனங்களில் வரலாம் என்ற நிலை வந்து விட்டது. யார் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது எப்படி தெரியும்? கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், எதற்காக பதிவு செய்ய வேண்டும்? ” என கேள்விகள் எழுப்பினார்.
இந்த நிலையில், “ இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையற்ற கர்ப்பங்களை தடுப்பதற்காக தேவையான ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். அதற்கான உபகரணங்களையும் (ஆணுறை) இலவசமாக வழங்குகிறோம். இது முழுக்க முழுக்க குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ்தான் செய்யப்படுகிறது” என சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், “சுகாதாரத்துறை அதிகாரிகள் என்ற வகையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இதில் எங்களுடன் சுகாதார கூட்டாளியாக கேர் இந்தியா நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. ஊரடங்கால் தேவையற்ற கர்ப்பங்கள் உலகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதன்காரணமாகவே இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு ஆலோசனைகளும், உபகரணங்களும் தரப்படுகின்றன” என்று கூறினார்.
Related Tags :
Next Story