பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு


பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
x
தினத்தந்தி 4 Jun 2020 3:15 AM IST (Updated: 4 Jun 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

புதுடெல்லி, 

தமிழகத்தில் மருத்துவ பட்ட படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு ஆகியவற்றில் மாநிலங்களால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக (‘கோட்டா‘) ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றி வருகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.

மருத்துவ பட்ட படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு ஆகியவற்றுக்கு மாநிலத்தின் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதை இந்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story