டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் தடை


டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 4 Jun 2020 9:31 PM IST (Updated: 4 Jun 2020 9:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினருக்கு இந்தியாவில் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் மாநாட்டை அதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி நடத்தினார்.

இந்தநிலையில் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாட்டில் பங்கேற்ற 2200 பேர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்தது. அத்துடன் அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததும், அனுமதி இன்றி மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அவர்களில் பல பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக பல்வேறு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர்கள் படிப்படியாக தங்களுடைய சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுற்றுலா விசாவை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அனுமதி அளிக்கப்படாத நடவடிக்கைகளில் கலந்துகொண்டது ஆகிய காரணங்களால், இனி அந்த 2200 பேரும் இந்தியாவில் நுழைய 10 ஆண்டுகள் தடைவிதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை பல்வேறு துறைகளுடன் ஆலோசித்த பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இறுதி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.


Next Story