இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் கொரோனா அதிகரிப்பா? - மாயாவதி மறுப்பு
இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் கொரோனா அதிகரிக்கும் என்ற கருத்துக்கு மாயாவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிதாக இந்த தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படி கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இதை உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு சொந்த ஊர்களுக்கு திரும்புகிற இடம் பெயர்ந்த தொழிலாளர்களை குற்றம் சுமத்துவதற்கு முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால் சொந்த ஊர்களுக்கு திரும்புகிற இடம் பெயர்ந்த தொழிலாளர்களில் வெறும் 3 சதவீதத்தினருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படுகிறது என்பது நிம்மதி தரும் தகவல் ஆகும்.
மேலும், ஊரடங்கால் மூடப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை திறப்பதற்காக அரசாங்கம் பொருளாதார சலுகைகள் என்ற பெயரில் உதவிகளை வழங்குவதாக பேசப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஒரு பெரிய சைக்கிள் தொழிற்சாலை பணம் இல்லாமல் மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்தினால் அது நல்லது. இவ்வாறு மாயாவதி டுவிட்டர் பதிவுகளில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story