கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்: உலக சுகாதார நிறுவனம் அனுமதி; இந்தியா வரவேற்பு


கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்: உலக சுகாதார நிறுவனம் அனுமதி; இந்தியா வரவேற்பு
x
தினத்தந்தி 5 Jun 2020 4:15 AM IST (Updated: 5 Jun 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தொடர உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் எந்தவொரு தடுப்பூசியும், மருந்தும் சந்தைக்கு வரவில்லை. இது தொடர்பான மருத்துவ சோதனைகள் உலகமெங்கும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் மலேரியாவுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பலன் அளிப்பது தெரிய வந்தது.

இதை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த மாத்திரைகளை ஆதரித்தார். அமெரிக்கர்களுக்கு கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த பல கோடி மாத்திரைகளை பிரதமர் மோடியிடம் பேசி வரவழைத்தார். அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு மருந்தாக இந்த மாத்திரைகளை அவரும் 2 வார காலம் எடுத்துக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் கூறும்போது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பிறகு தான் நன்றாக இருப்பதாக கூறினார்.

அதே நேரத்தில் இந்த மாத்திரைகளுக்கு எதிரான தகவல்களும் வெளிவந்தன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறபோது, கொரோனா நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்து இருப்பதாக சில ஆய்வு தகவல்கள் வெளிவந்தன.

அதைத் தொடர்ந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொடுத்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனாலும் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கவில்லை. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தர அது பச்சைக்கொடி காட்டியது.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனமும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தரலாம் என நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதனோம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவானது, கொரோனா சிகிச்சையில் எந்தவொரு மாற்றமும் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என பரிந்துரை செய்துள்ளது. எனவே செயற்குழுவானது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளிட்டவற்றின் மீதான சோதனைகளை தொடரலாம்” என கூறி உள்ளார்.

இதை இந்தியாவின் சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வரவேற்றுள்ளது.

அதன் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா இதுபற்றி கூறுகையில், “உயிரியல் நம்பகத்தன்மை, கேஸ் ஆய்வுகள் ஆகியவற்றின் அடைப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரசுக்கு எதிராக பரிந்துரை செய்ததில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதியாக உள்ளது. இது பல்லாண்டு காலமாக பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து. மருத்துவ பரிசோதனையின்போது ஏற்படுகிற எந்தவொரு சாதகமான முடிவும், உலக அளவில் மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பெரிய அளவிலான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.

இதை டாக்டர்கள் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என டாக்டர் பலராம் பார்கவா ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கருத்து தெரிவிக்கையில், “ ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை மீண்டும் தந்து பரிசோதிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் முடிவு எடுத்து இருப்பது, ஒரு பெரிய நலனை நோக்கி சரியான திசையில் செல்லும் நடவடிக்கை” என கூறினார்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் தரவுகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பாதுகாப்பானவை என காட்டுகின்றன. இந்த மருந்து குறிப்பிடத்தக்க இதய நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. எனவே உலக சுகாதார நிறுவனம் பகுப்பாய்வு செய்தது நல்லது. அவற்றின் தரவு மற்றும் சோதனையில் இருந்து மீண்டும் இது அறிமுகம் செய்யப்படுகிறது. இது விலை குறைவானது. எளிதில் கிடைக்கக்கூடியது. நல்ல பாதுகாப்பு தரவுடன் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மருந்து கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் ஒருவிதத்தில் நன்மை பயக்கும் என்றும் டாக்டர் ரன்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ள டாக்டர் ஷீலா காட்போல், “ ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மீதான சோதனை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த மருந்து மீதான சோதனையை தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சோதனையை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறினார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தவிர ரெமெடிசிவிர், லோபினவிர், ரிடோநவிர் ஆகிய மேலும் 3 மருந்துகள் உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் பரிசோதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story