கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராகுல் காந்தியுடனான உரையாடலில் தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் கருத்து
எங்குமே இத்தகைய பொது முடக்கத்தை கேட்டது இல்லை என்றும், கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது என்றும் ராகுல் காந்தியுடனான உரையாடலில் தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கையாளும் இந்தியாவின் அணுகுமுறை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அவ்வகையில், பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, ராஜீவ் பஜாஜ் கூறியதாவது:-
இந்தியா அமல்படுத்தி இருப்பது கடுமையான பொது முடக்கம். இதுபோன்ற பொது முடக்கத்தை நான் எங்குமே கேள்விப்பட்டது இல்லை. இது, பொருளாதாரத்தையே அழித்து விட்டது. இந்த முடக்கம், கொரோனா வளையத்தை தட்டை ஆக்குவதற்கு பதிலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளையத்தை தட்டை ஆக்கிவிட்டது. அதுதான் நாம் கண்ட பலன். இதிலிருந்து விடுபட நீண்ட காலம் பிடிக்கும். இந்த வைரஸ், தொற்றும் புற்றுநோய்க்கு சமமானது என்று பொதுமக்களிடையே பீதி ஊட்டப்பட்டது. ஆனால், இப்போது அவர்களின் மனதை மாற்றி, கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வைரஸ் இன்னும் நீடிப்பதை தெளிவுபடுத்துகிறது. ஊரடங்கை நீக்கினால், கொரோனா நம்மை தாக்க காத்திருக்கிறது. எனவே, பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. கொரோனா வருவதற்கு முன்பே பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. இப்போது, கொரோனா பிரச்சினை, இரண்டையும் இன்னும் ஓரத்துக்கு தள்ளிவிட்டது.
தொழில்துறை மீண்டும் இயல்புநிலைக்கு வருவது சுமுகமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. முதலில், மக்கள் மனதில் இருந்த பயத்தை அகற்ற வேண்டும். சரியோ, தவறோ பிரதமர் சொல்வதை மக்கள் கேட்பதுபோல் தோன்றுகிறது. எனவே, பிரதமர்தான் நாம் எப்படி முன்னேறி செல்ல போகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டும்.
இவ்வாறு ராஜீவ் பஜாஜ் கூறினார்.
Related Tags :
Next Story