இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: புதிதாக 9,304 பேருக்கு நோய்த்தொற்று


இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: புதிதாக 9,304 பேருக்கு நோய்த்தொற்று
x
தினத்தந்தி 4 Jun 2020 11:15 PM GMT (Updated: 2020-06-05T04:23:25+05:30)

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 9,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி, 

இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு போன்ற புள்ளிவிவர பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதில் கொரோனா புதிதாக 9,304 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 260 பேரின் உயிரையும் பறித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,16,919 ஆகவும், பலி எண்ணிக்கை 6,075 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதிதாக 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும்.

கொரோனாவால் புதிதாக உயிரிழந்த 260 பேரில், அந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 122 பேர். டெல்லியில் 50 பேரும், குஜராத்தில் 30 பேரும், தமிழகத்தில் 11 பேரும், மேற்குவங்காளத்தில் 10 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம், தெலுங்கானாவில் தலா 7 பேரும், ராஜஸ்தானில் 6 பேரும், ஆந்திராவில் 4 பேரும், பீகார், சத்தீஸ்கார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிக பாதிப்பை சந்தித்து வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2,587 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,122 பேரையும், தேசிய தலைநகர் டெல்லியில் 606 பேரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மத்தியபிரதேசத்தில் 371, மேற்குவங்காளத்தில் 345, உத்தரபிரதேசத்தில் 229, தமிழகத்தில் 220, ராஜஸ்தானில் 209, தெலுங்கானாவில் 99, ஆந்திராவில் 68, கர்நாடகாவில் 53, பஞ்சாபில் 47, ஜம்மு காஷ்மீரில் 34, பீகாரில் 25, அரியானாவில் 23, கேரளாவில் 11, உத்தரகாண்டில் 8, ஒடிசாவில் 7, ஜார்கண்ட், இமாசலபிரதேசம், சண்டிகாரில் தலா 5, அசாமில் 4, சத்தீஸ்காரில் 2, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் 74,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 27,256 பேரும், டெல்லியில் 23,645 பேரும், குஜராத்தில் 18,100 பேரும், ராஜஸ்தானில் 9,652 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,729 பேரும், மத்தியபிரதேசத்தில் 8,588 பேரும், மேற்குவங்காளத்தில் 6,508 பேரும், பீகாரில் 4,390 பேரும்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பாதிப்பு 4 ஆயிரத்தையும், தெலுங்கானாவில் 3 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அரியானாவில் 2,954, ஜம்மு காஷ்மீரில் 2,857, ஒடிசாவில் 2,388, பஞ்சாபில் 2,376, அசாமில் 1,672, கேரளாவில் 1,494, உத்தரகாண்ட் 1,085 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

ஜார்கண்ட் 752, சத்தீஸ்கார் 668, திரிபுரா 468, இமாசலபிரதேசம் 359, சண்டிகார் 301, மணிப்பூர் 118, லடாக் 90, புதுச்சேரி 82, கோவா 79, நாகாலாந்து 58, அருணாசலபிரதேசம் 38, அந்தமான் நிகோபர் தீவு மற்றும் மேகாலயாவில் தலா 33, மிசோரம் 14, தாதர்நகர் ஹவேலி 8, சிக்கிமில் 2 பேரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 2,16,919 பேரில், 1,04,107 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் 1,06,737 பேர் இந்த நோய்க்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Next Story