‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.
தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? என்று கேட்டனர்.
அத்துடன், மத்திய அரசிடம் நிலம் பெற்ற மற்றும் சலுகை பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க அரசு தயாரா? என்பது பற்றி அறிய விரும்புவதாகவும் நீதிபதிகள் கூறினார்கள்.
அதற்கு, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு தன்னால் முடிந்த வரை மத்திய அரசு சிகிச்சை அளித்து வருவதாகவும், சிகிச்சை பெற முடியாத மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளனர் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story