அம்பன் புயல்: மேற்கு வங்காளத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு பாதிப்பு; அரசு அறிக்கை தகவல்
மேற்கு வங்காளத்தில் அம்பன் புயலால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என மத்திய குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான அம்பன் புயல் வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த மே 20ந்தேதி பிற்பகலில் மேற்கு வங்காளத்தில் உள்ள டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. புயலை முன்னிட்டு மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால், மேற்கு வங்காளத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நிலைமையை ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று மேற்கு வங்காளம் சென்றது.
அந்த குழுவிடம் மேற்கு வங்காள அரசு அறிக்கை ஒன்றை வழங்கியது. இதன்படி, புயலால் மேற்கு வங்காளத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 442 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று 28.56 லட்சம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. 17 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்படைந்து உள்ளன. மீனவ பகுதிகளில் 1.48 லட்சம் குடிசைகள் சேதமடைந்து உள்ளதுடன், 8 ஆயிரத்து 7 படகுகளும் சேதமடைந்து உள்ளன.
இந்த புயலால் 2 ஆயிரத்து 148 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 355 பாலங்கள் மற்றும் 10 ஆயிரத்து 91 கி.மீட்டர் நகர்ப்புற சாலைகளும் சேதமடைந்து உள்ளன. புயலுக்கு போக்குவரத்து, தீயணைப்பு, அவசரகால உட்கட்டமைப்பு, சேமிப்பு கிடங்குகள், வீடுகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story