நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? ரமேஷ் போக்ரியால் பதில்


நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது?  ரமேஷ் போக்ரியால் பதில்
x
தினத்தந்தி 7 Jun 2020 3:01 PM IST (Updated: 7 Jun 2020 3:01 PM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு தற்போதும் நடைமுறையில் இருக்கிறது.

இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? என்றும், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து, எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது என விளக்கம் அளித்துள்ளார்.


Next Story