தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி


தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 7 Jun 2020 4:04 PM IST (Updated: 7 Jun 2020 5:11 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 18-ந்தேதி முதல் மூடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தஞ்சையில் பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் கால நினைவுச்சின்னங்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவை உள்ளன. சுற்றுலா தலமாக விளங்கும் கோவில்கள் மட்டும் 21 ஆயிரத்து 600 உள்ளன. இந்த சுற்றுலா தலங்களில் மட்டும் 360 பேர் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story