மும்பை விமான நிலையத்தில் 74 நாட்கள் சிக்கிய கானா கால்பந்து வீரர்! - ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்
கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கானா கால்பந்து வீரர் மும்பை விமான நிலையத்தில் 74 நாட்கள் சிக்கிய, ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தி டெர்மினல்...
2004-ம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்த ஹாலிவுட் திரைச்சித்திரம். டாம் ஹாங்க்ஸ், கேதரின் ஜீட்டா ஜோன்ஸ், ஸ்டான்லி டூசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் நியுயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலைய முனையத்தில் சிக்கி தவிக்கும் ஒரு கிழக்கு ஐரோப்பியரை பற்றியது. அவர் அமெரிக்காவினுள் நுழைய அனுமதி இல்லை. அதே நேரத்தில் தனது சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாது.
இந்த கிழக்கு ஐரோப்பியர் கதாபாத்திரத்தில் (விக்டர் நவோர்ஸ்கி) நாயகன் டாம் ஹாங்க்ஸ் வெகு யதார்த்தமாக நடித்து உள்ளங்களை கொள்ளை கொண்டார். இந்தப்படம் 6 கோடி டாலர் (சுமார் ரூ.450 கோடி) பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 2004 இதே ஜூன் மாதம் 18-ந் தேதி வெளியானது. 22 கோடி டாலர் என நான்கு மடங்கு வசூலை (சுமார் ரூ.1,650 கோடி) வாரிக்குவித்தது.
இந்தப்படத்தின் நாயகனுக்கு ஏற்பட்ட நிலையை மிஞ்சும் நிகழ்வு இது என்று சொன்னால் அது தப்பு இல்லை.
ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் கால்பந்து வீரர் ராண்டி ஜூவான் முல்லர் (வயது 23) என்பவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏற்பட்ட இடம், நமது மும்பை சர்வதேச விமான நிலையம். ஆச்சரியமாக இருக்கிறதா? இது உண்மைதான்.
இவர் வழக்கமாக கேரளாவில் உள்ள கிளப் ஒன்றுக்காக கால்பந்து விளையாட வருவார். அப்படி இந்த முறை வந்தபோதுதான் எதிர்பாராத சிக்கல் வந்து சேர்ந்தது. இந்த சிக்கலுக்கு வழிவகுத்தது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும், அதைத் தொடர்ந்து பொது போக்குவரத்து சாதனங்களின் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும்தான்.
கேரளாவில் விளையாடி விட்டு, மும்பை வந்து அங்கிருந்து கென்யா ஏர்வேஸ் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு திரும்ப இருந்தார். மும்பை வந்தபோது, ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. விமான சேவைகள் ரத்தாகி விட்டன. ஓட்டல்களும், விடுதிகளும், இன்ன பிற தங்குமிடங்களூம் மூடப்பட்டு விட்டன.
என்ன செய்வது என தெரியாது என சில நிமிடங்கள் முல்லர் திகைத்துத்தான் போனார்.
கவியரசர் கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!”
இந்த நிலையில்தான் முல்லர் இருந்தார்.
தாய் நாட்டுக்கு விமானத்தில் பறக்க வேண்டிய முல்லருக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. யதார்த்தம் புரிந்தார். இந்த விமான நிலையமே அவருக்கு தாய் வீடு போல ஆயிற்று.
ஒரு நாள் 2 நாள் அல்ல 74 நாட்கள்!
விமான நிலையம்தான் அவருக்கு எல்லாமும் ஆகிவிட்டது. விமான நிலைய நிறுவனமும் அவர் நிலை அறிந்து உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கி உதவிக்கரம் நீட்டி ஆதரித்து இருக்கிறது. அங்குள்ள ‘வைபை’ நெட்வொர்க் மூலம் ஊருக்கு பேச அனுமதித்து இருக்கிறார்கள்.
அடுத்துதான் சினிமா கிளைமாக்ஸ் மாதிரி நடந்தது.
முல்லரைப்பற்றி எப்படியோ ஒரு டுவிட்டர் வலைத்தள பதிவருக்கு தெரியவந்து இருக்கிறது. உடனே அவர் இதை மராட்டிய போக்குவரத்து மந்திரி ஆதித்ய தாக்கரே கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அவர் உடனடி நடவடிக்கை எடுத்தார். சிவசேனா இளைஞர் அணி (யுவசேனா) பிரமுகர் ராகுல் கனலை அனுப்பி முல்லரை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மீட்டு ஓட்டல் ஒன்றில் தங்க வைத்து விட்டார்.
இதற்காக கண்கள் பனிக்க முல்லர் ஆதித்ய தாக்கரேவுக்கும், ராகுல் கனலுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
“நன்றி ஆதித்ய தாக்கரே. நன்றி ராகுல் கனல். உங்களுக்கு மிகுந்த நன்றி. நீங்கள் செய்த உதவிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வணக்கம்” என கூறி உள்ளார்.
இதுபற்றி ராகுல் கனல் சொல்லும்போது, “ நான் விமான நிலையத்தில் அவரை மீட்க சென்று பேசியபோது அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய் அழுது விட்டார். அதே நேரத்தில் 23 வயதில் அவருக்கு இருக்கிற அசாத்திய தைரியத்தையும், சூழ்நிலைக்கு ஏற்ப போராடுகிற மன வலிமையையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை” என்கிறார்.
இதே போன்று மும்பை சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “முல்லர் விமான நிலையத்தில் சிக்கித்தவித்தபோது அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம்” என்கிறார்.
சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும்? எப்போது தாய்நாடு போவோம்?
- இதுதான் முல்லரின் இப்போதைய எதிர்பார்ப்பு. அது விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Related Tags :
Next Story