இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 6,929 ஆக உயர்வு
ஒரே நாளில் 9,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்த வைரசால் 6,929 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பு விவரங்களை ஒவ்வொரு நாள் காலையிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் புதிதாக 287 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,46,628 ஆகவும், பலி எண்ணிக்கை 6,929 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. இந்த நோய்த்தொற்றில் இருந்து 1,19,293 பேர் குணமடைந்துள்ளனர். 1,20,406 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் 120, டெல்லியில் 53, குஜராத்தில் 29, தமிழகத்தில் 19, மேற்குவங்காளத்தில் 17, மத்தியபிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, தெலுங்கானாவில் 10, ஜம்மு காஷ்மீரில் 3, கர்நாடகா, சத்தீஸ்கார் மற்றும் பஞ்சாபில் தலா 2, பீகார் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என மொத்தம் 287 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 2-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 1,219 பேர் உயிரிழந்துள்ளனர். 761 பேரை பலி கொடுத்துள்ள டெல்லி 3-வது இடத்தில் இருக்கிறது.
மத்தியபிரதேசம் மற்றும் மேற்குவங்காளத்தில் பலி எண்ணிக்கை தலா 400-ஐ நெருங்கி உள்ளது. உத்தரபிரதேசத்தில் 257 பேரும், தமிழகத்தில் 269 பேரும், ராஜஸ்தானில் 231 பேரும், தெலுங்கானாவில் 123 பேரும், ஆந்திராவில் 73 பேரும், கர்நாடகாவில் 59 பேரும், பஞ்சாபில் 50 பேரும், ஜம்மு காஷ்மீரில் 39 பேரும், பீகாரில் 30 பேரும், அரியானாவில் 24 பேரும், கேரளாவில் 15 பேரும், உத்தரகாண்டில் 11 பேரும், ஒடிசாவில் 8 பேரும், ஜார்கண்டில் 7 பேரும், இமாசலபிரதேசம் மற்றும் சண்டிகாரில் தலா 5 பேரும், சத்தீஸ்கார் மற்றும் அசாமில் தலா 4 பேரும், லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு சுமார் 3 ஆயிரம் பேரின் உயிரை பறித்த கொரோனா, 82,968 பேரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் 31,667 பேரும், டெல்லியில் 27,654 பேரும், குஜராத்தில் 19,592 பேரும், ராஜஸ்தானில் 10,331 பேரும், உத்தரபிரதேசத்தில் 9,733 பேரும், மத்தியபிரதேசத்தில் 9,228 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்காளத்தில் 7,738, கர்நாடகாவில் 5,213, பீகாரில் 4,915, ஆந்திராவில் 4,510, அரியானாவில் 3,952, தெலுங்கானாவில் 3,496, ஜம்மு காஷ்மீரில் 3,467, ஒடிசாவில் 2,781, பஞ்சாபில் 2,515, அசாமில் 2,397, கேரளாவில் 1,807, உத்தரகாண்டில் 1,303, ஜார்கண்டில் 1,000, சத்தீஸ்காரில் 923, திரிபுராவில் 747, இமாசலபிரதேசத்தில் 400, சண்டிகாரில் 309, கோவாவில் 267, மணிப்பூரில் 157, நாகாலாந்தில் 107 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி, லடாக், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, மேகாலயா, மிசோரம், தாதர்நகர் ஹவேலி, சிக்கிமில் 7 முதல் 99 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story