கொரோனா நோயாளிகள் புதிய மருந்துகளை அணுக விதிமுறைகள்: வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது
கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் புதிய மருந்துகளை அணுக அனுமதி அளிக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடித்து, மருத்துவ சோதனைகளை முடித்து சந்தைக்கு வரவில்லை.
இதனால் கொரோனா தொற்று அறிகுறிகளுக்கான மருந்துகள் தருவதுடன், நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குவதற்கான மாத்திரைகள், உணவுகள் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றன. இதில்தான் பெரும்பாலான நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்.
நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய் உடைய சிலர் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்த முடியாமல் மரணம் நேரிடுகிறது. மற்றபடி, வளர்ந்த வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் கொரோனா உயிர்ப்பலிகள் குறைவாகத்தான் இருக்கின்றன.
இந்த நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் புதிய மருந்துகளை கொடுத்து சோதிக்க ஏற்ற வகையில் வரைவு விதிகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் (திருத்தம்) விதிகள், ஒரு ஆஸ்பத்திரி அல்லது மருத்துவ நிறுவனம் பரிந்துரைத்த அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை தயாரிக்கவும் இயக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கிறது.
ஜூன் 5-ந் தேதியிடப்பட்ட அரசு கெஜட் அறிவிக்கையில் கூறி உள்ள வரைவு விதிகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* உயிருக்கு ஆபத்தான நோய் அல்லது கடுமையான நிரந்தரமான இயலாமைக்கு வழிவகுக்கிற நோய் ஆகியவற்றுக்கு கருணை அடிப்படையில் சிகிச்சை அளிக்க புதிய மருந்துகளை இறக்குமதி செய்யலாம். இது நாட்டில் அனுமதிக்கப்படாத, ஆனால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துகிற மருந்தாக இருக்கலாம். இதற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
* மேலே கூறிய நோக்கத்துக்காக, ஒரு ஆஸ்பத்திரி புதிய மருந்துகளை பரிந்துரை செய்தால், அந்த மருந்தை விதிகளுக்கு உட்பட்டு குறைந்த அளவில் தயாரிக்க ஒப்புதல் அளிக்கலாம்.
* ஒரு புதிய மருந்தை தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர், மருந்து பரிந்துரைக்கப்பட்ட நோயாளியிடம் இருந்தோ அல்லது அவரது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்தோ எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும். அதன்பின்னர் அந்த மருந்தை தயாரிப்பதற்கு ஆஸ்பத்திரியின் அல்லது மருந்து நிறுவனத்தின் நெறிமுறைக்குழுவின் ஒப்புதலை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
* நெறிமுறைக்குழுவின் ஒப்புதலைப் பெற்றபிறகு, ஒரு மருந்தை கருணை அடிப்படையில் பயன்படுத்தும் நோக்கத்துக்காக, தயாரிப்பதற்கு மத்திய உரிம ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய மருந்தை தயாரிப்பதற்கு அனுமதியை பெற்ற தயாரிப்பாளர், அனுமதியில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக மட்டுமே அந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதிகூட சந்தையில் விற்கப்படக்கூடாது. அலலது எந்த நிறுவனத்துக்கும் அல்லது இடத்துக்கும் வழங்கப்படக்கூடாது.
* இந்த புதிய வரைவு விதிகள் 15 நாள் நடைமறையில் இருக்கும். இந்த காலத்தில் இதன்மீது தங்கள் ஆட்சேபத்தையும், பரிந்துரைகளையும் பொதுமக்கள் செய்து, அவற்றை மத்திய அரசு பரிசீலிக்க முடியும்.
* உரிமம் பெற்ற இறக்குமதியாளர் அல்லது மருந்து தயாரிப்பாளர், இந்த சட்ட விதிமுறைகளுக்கு இணங்க நடக்க வேண்டும். அப்படி நடக்க தவறினால், மத்திய உரிம ஆணையம் உரிய விசாரணைக்கு பின்னர், உரிமத்தை குறிப்பிட்ட காலத்துக்கு இடைநீக்கம் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம்.
இறக்குமதி செய்கிற அல்லது தயாரிக்கிற புதிய மருந்து, ஒரு நோயாளிக்கு 100 டோஸ்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.
அதே நேரத்தில், சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், மருத்துவ அதிகாரி பரிந்துரை அல்லது நெறிமுறை கமிட்டி பரிந்துரைப்படி அந்த மருந்தை கூடுதல் அளவுக்கு தயாரிக்க மத்திய உரிம ஆணையம் அனுமதி தரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில் நாடு முழுவதும் பல மருந்துகள் உள்ளன. வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிரை, நெருக்கடியை கருத்தில் கொண்டு கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story