100 நாள் வேலை திட்டம் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை
100 நாள் வேலை திட்டம் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவுமாறு, மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
100 நாள் வேலை திட்டம் பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான பிரச்சினை அல்ல என்றும், மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவவேண்டும் என்றும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2005-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (100 நாள் வேலை திட்டம்) பயனுள்ள, ஆக்கபூர்வமான திட்டம் ஆகும். பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவ இந்த திட்டம் வகை செய்கிறது.
ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் கையில் பணம் நேரடியாக போய்ச் சேருகிறது. சுதந்திர இந்தியாவில் சிறந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விட சிறந்த உதாரணம் எதுவும் கிடையாது
நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் இந்த சமயத்தில் அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல. மேலும் இது பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான பிரச்சினை அல்ல. அரசாங்கத்தின் கையில் சக்திவாய்ந்த அதிகாரம் உள்ளது. எதிர்பார்ப்புகளுடன் மக்கள் இருக்கும் இந்த நேரத்தில் இந்த திட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.
இந்த பயனுள்ள திட்டம் என்பதால் தான் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த திட்டத்தை எதிர்க்கும் ஆட்சியில் கூட கடந்த 6 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மோடி அரசாங்கம் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் அறியாமல் இருக்கிறது. பிரதமராக பதவி ஏற்றதும், இந்த திட்டத்தை முடக்குவது சாத்தியம் இல்லாதது என்பதை புரிந்து கொண்ட மோடி, அதன் முக்கியத்துவத்தை குறைக்க விரும்பினார். வேண்டா வெறுப்பாக இந்த திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியின் தோல்விக்கு அடையாளமாக இந்த திட்டம் விளங்குவதாக மோடி குறை கூறினார். ஆனால் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியவில்லை. அதனால் பின்வாங்கிவிட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்பதால் அதை தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்களுடன் ஒருங்கிணைத்து அதற்கு புது வடிவம் கொடுக்க இப்போது மோடி அரசு முயற்சிக்கிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்துக்காக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக தொகையை தாமதமாக ஒதுக்கி உள்ளார். கடந்த மே மாதத்தில் மட்டும் 2 கோடியே 19 லட்சம் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான மக்களின் வறுமையை போக்கும் உலகின் மிகப்பெரிய இந்த திட்டத்தை தேசம் அங்கீகரித்து உள்ளது. அனைவருக்கும் சமஊதியம் வழங்க வகை செய்யும் இந்த திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story