மாநிலங்களவை தேர்தல்: தேவேகவுடா வேட்பு மனு தாக்கல்


மாநிலங்களவை தேர்தல்: தேவேகவுடா வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 9 Jun 2020 3:04 PM IST (Updated: 9 Jun 2020 3:50 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கர்நாடகத்திற்கான 4 இடங்கள் இந்த மாதத்தில் காலியாகின்றன. இந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2, காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைப்பது உறுதி. மீதமுள்ள ஒரு இடத்திற்கு தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை எந்த கட்சியிடமும் இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் தற்போது 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் இன்னும் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரசுக்கு ஒரு இடத்திற்கு தேவையான 48 எம்.எல்.ஏ.க்கள் போக மீதம் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும். ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது.

ஆனால் தேவேகவுடா, இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர், அவர் மாநிலங்களவை எம்.பி. ஆக வேண்டும் என்று விரும்பினார்கள். மனு தாக்கல் செய்ய வருகிற 9-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இதனிடையே  கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தேவகவுடா இன்று முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்டோர் உடன் சென்றனர். காங்கிரஸ் ஆதரவு கிடைத்திருப்பதால் அவர் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் எனத் தெரிகிறது.


Next Story