கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த பா. ஜனதா செய்தி தொடர்பாளர் வீடு திரும்பினார்


கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த பா. ஜனதா செய்தி தொடர்பாளர் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 9 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-10T03:00:44+05:30)

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த பா. ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா வீடு திரும்பினார்.

புதுடெல்லி, 

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், டாக்டர் சம்பித் பத்ரா (வயது 45). இவர் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கடந்த மாதம் கொரோனா அறிகுறிகளால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை தேறி வந்தது.

இந்த நிலையில் நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப்பதிவில் அவர், “நான் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி விட்டாலும், முழுமையாக குணம் அடையவில்லை. இன்னும் சில நாட்கள் நான் வீட்டில்தான் தங்கி இருப்பேன். உங்கள் அனைவரின் ஆசி மற்றும் பிரார்த்தனைகளால் நான் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறேன். நான் முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும்” என கூறி உள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் தன்னை நன்றாக கவனித்துக்கொண்ட கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அதில் அவர், “நான் உடல் நலிவுற்றிருந்தபோது, கட்சி என்னை ஒரு தாயாக கவனித்துக்கொண்டது. கட்சித்தலைமை என் நிழலாக இருந்தது. பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றி. கட்சி என் குடும்பம். பாரதீய ஜனதாவுக்கு என் வணக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பலரும் அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

Next Story