கொரோனா ஊரடங்கு தளர்வுக்குபிறகும் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகரிப்பு
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகும், சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காக தொடர்ந்து சரக்கு ரெயில் போக்குவரத்து மட்டும் நடந்து வந்தது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பயணிகள் ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் சரக்கு ரெயில்போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த மே மாதத்தில் 8 கோடியே 20 லட்சம் டன் சரக்குகள் ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தைவிட 25 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் 9-ந்தேதி வரை மொத்தம் 17 கோடியே 5 லட்சம் டன் அத்தியாவசிய பொருட்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரக்குரெயில்கள் மூலம் உணவு தானியங்கள், உப்பு, பால், வெங்காயம், பழங்கள், காய்கறிகள், நிலக்கரி, உரம் ஆகியவை அனுப்பப்படுகிறது. இதுதவிர 96 வழித்தடங்களில் பார்சல் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் வழியாக இயக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story