கொரோனா பரவல் மோசமானால் நடக்கப்போவது என்ன? - பிரபல மருத்துவ பத்திரிகை அதிர்ச்சி தகவல்
கொரோனா பரவல் மோசமானால் நடக்கப்போவது என்ன என்பது குறித்து, பிரபல மருத்துவ பத்திரிகை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியபோது அது 200 உலக நாடுகளில் பரவி விடும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை.
ஆனால் பரவி விட்டது. மார்ச் 11-ந் தேதி, இதை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
உலமெங்கும் சுமார் 73 லட்சம் பேரை இந்த வைரஸ் தொற்று தாக்கி இருக்கிறது. இதன்காரணமாக, ஏறத்தாழ 4 லட்சத்து 12 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. வீடுகளுக்குள் மக்களை முடக்கியது, முக கவசம் அணிய வைத்தது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வைத்தது என எத்தனையோ கட்டுப்பாட்டு உத்திகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
ஆனாலும் இந்த வைரஸ் இன்னும் கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
இதையொட்டிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை புகழ்பெற்ற ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் பூ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர வைப்பதாகத்தான் இருக்கின்றன. அது வருமாறு:-
* கொரோனா வைரஸ் இறப்புவீதம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் 5.9 சதவீத அளவிலும், சீனாவின் மற்ற பிராந்தியங்களில் இது 0.98 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கிறோம்.
* அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகிறபோது, அதிக இறப்புகளுக்கு வழிவகுக்கும்.
* 1918-ம் ஆண்டு உலகமெங்கும் பரவிய இன்புளுவென்சா காய்ச்சல் (எச்1என்1) இறப்புவீதம் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. இதனால் 5 கோடி முதல் 10 கோடி வரையிலானவர்கள் அதில் பலி ஆனார்கள். கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால், இன்புளுவென்சா காய்ச்சலில் ஏற்பட்ட கதி இதிலும் ஏற்படும்.
* சீனாவின் மத்திய நகரமான உகானில் இந்த நோய் முதலில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் பரவியதும் கட்டுப்படுத்தப்பட்டது.
* சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவும் அபாயம் உள்ளது. ஏனெனில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
* சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் செயல்படுத்திய கட்டுப்பாட்டு உத்திகள், வெற்றி தேடித்தந்துள்ளது. ஆனால் உலகளாவிய தொற்றுநோயாக மாறி இருப்பதால், சீனாவில் இது மீண்டும் கிளர்ந்தெழும் வாய்ப்பு உள்ளது.
* கட்டுப்பாட்டு உத்திகள் வெற்றி தேடித்தந்திருப்பதால், அங்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி மே மாதம் 31-ந் தேதி வரையில் சாரசரியாக 54 நோய்த்தொற்றுகள்தான் பதிவாகி இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் சொல்கிறது. அவை கிட்டத்தட்ட அனைத்துமே வெளிநாட்டு தொடர்புகளை உடையவை. ஒவ்வொரு நாளும் சராசரியாக 0.6 சதவீதம் இறப்புகள் பதிவாகி இருக்கின்றன.
* தற்போது சமூக பரவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் சர்வதேச அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தொற்றால் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் தொற்று பரவல் ஆபத்து ஒரு கவலையாக இருக்கிறது. ஏறத்தாழ நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
* கொரோனா வைரசை எதிர்ப்பதில் சீனாவின் குறிக்கோள், ஒரு பாதுகாப்பான, நம்பகமான தடுப்பூசிதான். அதை உருவாக்குகிற வரையில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் அல்லது குறைவான உள்ளூர் பரவலை பராமரிக்க வேண்டும் என்பதுதான்.
* தற்போது கொரோனா பரவி கொண்டிருப்பது காலவரையின்றி தொடரக்கூடும். அதாவது தடுப்பூசி கண்டுபிடித்து விடுவிக்கிறவரையில்...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story