சத்தீஷ்காரில் கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு


சத்தீஷ்காரில் கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Jun 2020 8:23 PM IST (Updated: 11 Jun 2020 8:23 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் கடந்த 3 நாட்களில் கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் 230 முதல் 240 யானைகள் வரை வசித்து வருகின்றன.  இவற்றில் 3 யானைகள் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளன.  சத்தீஷ்காரின் பிரதாப்பூர் வன சரக பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை ஒரு யானை உயிரிழந்து கிடந்தது.  நேற்று சூரஜ்பூர் பகுதியில் மற்றொரு யானை இறந்து கிடந்தது.  இவை இரண்டும் பெண் யானைகளாகும்.  விஷத்தினால் அவை உயிரிழந்து உள்ளது உடற்கூறு ஆய்வு முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை பல்ராம்பூர் மாவட்டத்தின் ராஜ்பூர் வன பகுதியில் மற்றொரு பெண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  இந்த யானை கர்ப்பிணியாக இருந்துள்ளது.  இருதயம் செயல்படுவது நின்று போன காரணத்தினால் யானை இறந்திருப்பது போல் தெரிகிறது என வன துறை அதிகாரி ஒருவர் கூறினார்.  அந்த யானைக்கு உடலில் சில கட்டிகளும் இருந்துள்ளன என கூறினார்.  எனினும், உடற்கூறு அறிக்கையின்படியே சரியான காரணம் தெரிய வரும்.  3 யானைகளும் ஒரே கூட்டத்தில் வசித்திருக்க கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 7ந்தேதி பிரதாப்பூர் நோக்கி செல்வதற்கு முன் 18 யானைகள் கொண்ட கூட்டமொன்று கார்வா கிராமத்தில் சில மண் குடிசைகளை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.

இந்நிலையில், யானைகள் உயிரிழப்பு பற்றி சத்தீஷ்கார் வன அமைச்சர் முகமது அக்பர் கூறும்பொழுது, முதற்கட்ட அறிக்கைகளின்படி, ஒரு யானை இருதயம் செயல்படுவது நின்றதனால் இறந்துள்ளது.  மற்றொரு யானை விஷ பொருளை தின்று அதனால் உயிரிழந்து உள்ளது.  3வது யானை பற்றிய அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என கூறியுள்ளார்.

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்த பழம் சாப்பிட்டதில் அது வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், சத்தீஷ்காரில் அடுத்தடுத்து 3 நாட்களில் 3 பெண் யானைகள் உயிரிழந்து உள்ளது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story