டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது - நிர்மலா சீதாராமன்


டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது - நிர்மலா சீதாராமன்
x

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால், அதற்காக அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.  இதில், மத்திய நிதி மந்திரி அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கான தாமத கட்டணம் ரத்துசெய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியவர்களுக்கான தாமதக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகளும், நிலுவையில் உள்ள இழப்பீட்டை வழங்குவது தொடர்பான கோரிக்கையை கூட்டத்தில் எழுப்பினர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

ஜூலை மாதம் 2017 - ஜனவரி 2020 வரை ஏராளமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. அவர்கள் வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், ஜிஎஸ்டி வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது.

இந்தக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவதிலும் நிலுவை இருந்து, அத்துடன் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரை ஜிஎஸ்டி வரி கணக்குத்தாக்கல் செய்வோருக்கு பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story