21-ந்தேதி சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் 13½ மணிநேரம் மூடல்
வருகிற 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 13½ மணிநேரம் மூடப்படுகிறது, என முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருமலை,
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ரூ.300 டிக்கெட் பக்தர்கள் முன்கூட்டியே திருமலைக்கு வந்து அவதிப்பட வேண்டாம். தரிசன நேரத்துக்கு வந்து ஏழுமலையானை வழிபடலாம். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தைப் பற்றி சிலர் அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தேவஸ்தானத்தைப் பற்றி அவதூறு பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. டைம் ஸ்லாட் டோக்கனில் 3 ஆயிரம் பக்தர்களும், ரூ.300 டிக்கெட்டில் 3 ஆயிரம் பக்தர்களும் என தினமும் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
டைம் ஸ்லாட் டோக்கன் வழங்குதலில் ஜூன் மாத ஒடுக்கீடு முறை 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு மேலும் ஒதுக்கீடு முறையில் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விடுதி அறைக்கு முன்பதிவு செய்வோருக்கு 24 நேரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
65 வயதுக்கு மேலும், 10 வயதுக்குட்பட்டோருக்கும் சாமி தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்களுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதற்கான தேதியை மாற்றி வழங்கும் படி கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.
ஊரடங்கு காலத்தில் ரூ.25-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது. அந்த லட்டுகள் 25 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டன. இது, பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் செய்தால் நன்றாக இருக்கும் என பக்தர்கள் கூறினர்.
21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கிரகணம் அன்று காலை 10.18 மணிக்கு தொடங்கி மதியம் 1.38 மணிக்கு முடிகிறது. ஆகையால் முன்கூட்டியே 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 13½ மணிநேரம் கோவில் மூடப்படுவதால் பக்தர்களுக்கான சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story