இந்தியா-சீனா எல்லை பிரச்சினை: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - மோடி தலைமையில் நடைபெறுகிறது


இந்தியா-சீனா எல்லை பிரச்சினை: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - மோடி தலைமையில் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 17 Jun 2020 11:15 PM GMT (Updated: 17 Jun 2020 9:32 PM GMT)

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவின் லடாக் எல்லையில் கல்லான் பள்ளத்தாக்கில் குவித்திருந்த தனது ராணுவ படைகளை சீனா கடந்த 15-ந்தேதி விலக்கி கொண்டது. அப்போது நடந்த மோதலில் தமிழக வீரர் உள்பட இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய வீரர்கள் இறப்பது வாடிக்கையாகி வந்த நிலையில், சீனாவின் தாக்குதலால் இந்திய வீரர்கள் பலியாகி இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி களநிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் லடாக் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை

இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்றும், அதில் அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லை பிரச்சினை தொடர்பாக தலைவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி சீனாவுக்கு எதிரான இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story