கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா உரிமை கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது


கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா உரிமை கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது
x
தினத்தந்தி 20 Jun 2020 7:10 PM GMT (Updated: 20 Jun 2020 7:10 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா உரிமை கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது.

புதுடெல்லி,

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த 15-ந்தேதி நடந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சீனா, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறியது.

இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று எனவும், இதை ஏற்க முடியாது என்றும் ஏற்கனவே இந்தியா தெரிவித்து இருந்தது. ஆனால் மீண்டும் கல்வான் பள்ளத்தாக்கை அந்த நாடு உரிமை கொண்டாடுகிறது. இதை நேற்று மீண்டும் இந்தியா நிராகரித்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக இருக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் இந்த புதிய மிகைப்படுத்தப்பட்ட உரிமை கொண்டாடும் முயற்சியை ஏற்க முடியாது. இது கடந்த காலங்களில் சீனா கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் இல்லை.

கல்வான் பள்ளத்தாக்கு உள்பட, இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அனைத்து நிலைகளையும் இந்திய ராணுவம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. எல்லையில் உள்ள பிற பகுதிகளில் கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளை போலவே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் கடைப்பிடிக்கிறார்கள்.

உண்மையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்டகாலமாக இந்திய வீரர்கள் எந்த பிரச்சினையும் இன்றி ரோந்து சென்று கொண்டிருக்கின்றனர். உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அவர்கள் எந்த சர்ச்சையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

சீன வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த மாதம் மத்தியில் முதல் பல இடங்களில் அத்துமீறி வருகின்றனர். இதனால்தான் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளுக்கு இந்திய ராணுவத்தால் தகுந்த பதிலடி கிடைத்தது. எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வை சீனா உண்மையாக கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்.” இவ்வாறு அனுராக் ஸ்ரீவத்சவா கூறினார்.

Next Story