கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2020 12:04 AM GMT (Updated: 22 Jun 2020 12:26 AM GMT)

கா‌‌ஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர் உள்பட 4 பயங்கரவாதி களை பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத்தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காஷ்மீர் போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக அந்தப்பகுதியில் செல்போன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி தானியங்கி துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். உடனே சுதாரித்துக்கொண்ட வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டை சிறிதுநேரம் நீடித்தது.

இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அதில் ஷாகுர் பரூக் லங் என்பவர் கடந்த மே மாதம் 20-ந்தேதி 2 எல்லை பாதுகாப்பு வீரர்களை கொன்றவர். மற்றொருவர் பெயர் ஷாகித் அகமது பாத். தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எல்லை பாதுாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் பாப் என்ற பயங்கரவாதி கொல்லபட்டார். ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கர அமைப்பை சேர்ந்த இவர், கண்ணிவெடி தயாரித்து நாசவேலைகளை செயல்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் தர்சூ என்ற இடத்தில் ராஷ்டிரிய ரைபிள் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் காஷ்மீர் மாநில போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் ஹாஜிபீர் பகுதியில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதேபோல் ராம்பூர் செக்டாரில் உள்ள நம்ப்ளாவில் நடந்த தாக்குதலில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story