சீனாவுக்கு எதிராக 2 போர்களில் இந்தியா ஈடுபட்டு உள்ளது; கெஜ்ரிவால் காரசார பேச்சு
சீனாவுக்கு எதிராக 2 போர்களில் இந்தியா ஈடுபட்டு உள்ளது என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் கொரோனாவுக்கு நேற்று 63 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,175ஐ எட்டியது. நேற்று வரை 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 24,558 பேர் சிகிச்சையில் இருந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி, டெல்லி முன்னிலைக்கு சென்றுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவால் காணொலி காட்சி வழியே செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் கூறும்பொழுது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட தொடக்க நாட்களில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஆனால், இன்று அது நாளொன்றுக்கு 18 ஆயிரம் என அதிகரித்து உள்ளது. பொதுமக்களுக்கு, பரிசோதனை செய்து கொள்வதில் எந்த பிரச்னையும் ஏற்படாது.
நமது நாடு சீனாவுக்கு எதிராக இரண்டு போர்களில் ஈடுபட்டு உள்ளது. ஒன்று எல்லை பகுதியில். மற்றொன்று சீனாவில் இருந்து வந்த வைரசுக்கு எதிராக. இந்த இரு போர்களிலும் தொடர்ந்து நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவற்றை அரசியலாக்க கூடாது. நம்முடைய தைரியம் மிகுந்த வீரர்கள் பின்வாங்க போவதில்லை. வெற்றி பெறும் வரை நாமும் ஓய்ந்து போவதில்லை என்று கூறினார்.
Related Tags :
Next Story