கொரோனா கைதி உயிரிழப்பு; டெல்லி சிறையில் 17 சக கைதிகளுக்கு பாதிப்பு உறுதி
டெல்லி சிறையில் உயிரிழந்த கொரோனா பாதித்த கைதியுடன் 17 சக கைதிகளுக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் மண்டோலியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தவர் கன்வர் சிங் (வயது 62). கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறை வாசம் அனுபவித்து வந்த அவர் கடந்த 15ந்தேதி திடீரென உயிரிழந்து விட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. எனினும், அதற்கான அறிகுறிகள் இல்லாமலேயே அவர் இருந்துள்ளார். டெல்லி சிறையில் கைதி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியானது இதுவே முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சிங்குடன் தொடர்பில் இருந்த 29 கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனைகளை அதிகாரிகள் நடத்தினர். இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அவர்களில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்ற 12 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவு வெளிவந்து உள்ளது.
Related Tags :
Next Story