‘’காங். ஆட்சியில்தான் 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலம் பறிபோனது” மன்மோகன்சிங்குக்கு பா.ஜனதா பதிலடி


‘’காங். ஆட்சியில்தான் 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலம் பறிபோனது” மன்மோகன்சிங்குக்கு பா.ஜனதா பதிலடி
x
தினத்தந்தி 22 Jun 2020 8:30 PM GMT (Updated: 22 Jun 2020 7:31 PM GMT)

சீன எல்லை விவகாரம் தொடர்பாக மன்மோகன்சிங் கருத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி, 

சீன எல்லை பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசை விமர்சித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். பலியான வீரர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் அளித்துள்ளார். ஜே.பி.நட்டா தனது ‘டுவிட்டர்‘ பதிவுகளில் கூறியிருப்பதாவது:- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஒற்றுமை பற்றி கூறியுள்ளார். காகிதத்தில் உள்ள இந்த வார்த்தைகளை, யார் சீர்குலைப்பது என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். நமது படையினரை அவமதிப்பதையும், கேள்வி கேட்பதையும் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்திக் கொள்ள வேண்டும். துல்லிய தாக்குதலுக்கு பிறகு கூட அவர்கள் இப்படித்தான் செயல்பட்டனர்.

மன்மோகன்சிங் இருக்கும் கட்சியின் ஆட்சியில்தான், 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பு, எவ்வித எதிர்ப்பும் இன்றி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. இந்திய பகுதி சீனாவிடம் தாரை வார்க்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தில், 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை 600 தடவை சீன ஊடுருவல்கள் நடந்தன.

மன்மோகன்சிங்கின் கருத்துகள் வெறும் வார்த்தை விளையாட்டுகளாகவே உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் நடத்தையையும், செயல்களையும் பார்க்கும் பொதுமக்கள், அவர்களின் வார்த்தைகளை நம்ப மாட்டார்கள். இந்தியா முழுவதும் பிரதமர் மோடியை நம்புகிறது, ஆதரிக்கிறது. 130 கோடி மக்களும், இதுபோன்ற சவாலான நேரங்களில் பிரதமரின் நிர்வாக அனுபவத்தை பார்த்துள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட அவர் தேசநலனையே பெரிதாக கருதுவதை கண்டுள்ளனர்."இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Next Story