பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து -டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. காஷ்மீர் எல்லையில் உள்ள கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீநகரில் உள்ள குனிமார் பகுதியில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்திலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
இதற்கிடையே, கதுவா மாவட்டத்தில் உள்ள ரதுவா கிராமத்தின் அருகே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் பறந்து வந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.
இந்த நிலையில், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் நகருக்குள் ஊடுருவி இருக்கலாம் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story