லடாக் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு- கூடுதல் உஷார் நிலையில் இருக்க படைகளுக்கு அறிவுறுத்தல்


லடாக் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு- கூடுதல் உஷார் நிலையில் இருக்க படைகளுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2020 10:30 PM GMT (Updated: 23 Jun 2020 9:35 PM GMT)

இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டு உள்ள லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவானே நேற்று ஆய்வு செய்தார்.

புதுடெல்லி, 

இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டு உள்ள லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவானே நேற்று ஆய்வு செய்தார். அப்போது எல்லை நெடுகிலும் கூடுதல் உஷார் நிலையில் இருக்குமாறு படைகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

லடாக் எல்லையில் சீனாவின் ஊடுருவலால் ஏற்பட்ட பதற்றமான சூழல் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரும் மோதலுக்கு வழி வகுத்தது. 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ந்தேதி நடந்த இந்த மிகப்பெரிய மோதல் சம்பவத்தில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இரு நாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.

முன்னதாக கல்வான் மோதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனால் எல்லையில் கூடுதல் படைகளை குவித்த இந்தியா, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக முப்படைகளையும் தயாராக வைத்து உள்ளது.

இந்த நிலையில் ராணுவ தளபதி நரவானே 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். அங்கு ராணுவ உயர் கமாண்டர்களுக்கான 2 நாள் மாநாட்டில் பங்கேற்றார். அதை முடித்துக்கொண்டு அவர் லே பகுதிக்கு சென்றார்.

அங்கு இறங்கியதும் முதலில், சீன ராணுவ தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறும் 18 வீரர்களையும் தனித்தனியாக பேசிய நரவானே, அந்த வீரர்களின் துணிச்சலுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் அவர் லடாக் எல்லையில் நிலவும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்தார். இதற்காக பல முன்னணி நிலைகளுக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.

அங்கு சீனாவின் அச்சுறுத்தல், படைகளின் தயார் நிலை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் களத்தில் இருக்கும் ராணுவ கமாண்டர்கள் மற்றும் வீரர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சீனாவின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்காக எல்லை நெடுகிலும் அதிக உஷார் நிலையை கடைப்பிடிக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்தியா சார்பில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்திய லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்குடன் விரிவான சந்திப்பு ஒன்றை நரவானே நடத்தினார். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து ராணுவ தளபதி கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து நரவானே புறப்பட்டு சென்றார்.

கடந்த வாரம் விமானப்படை தளபதி பதாரியா லடாக் மற்றும் ஸ்ரீநகர் விமானப்படை தளங்களுக்கு சென்று விமானப்படையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story