லடாக் மோதல் விவகாரம்: பா.ஜனதா-காங்கிரஸ் கடும் மோதல்


லடாக் மோதல் விவகாரம்: பா.ஜனதா-காங்கிரஸ் கடும் மோதல்
x
தினத்தந்தி 23 Jun 2020 11:30 PM GMT (Updated: 23 Jun 2020 9:45 PM GMT)

லடாக்கில் நடந்த மோதல் தொடர்பாக, பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

புதுடெல்லி, 

லடாக் பிராந்தியத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடந்த சண்டையை முன்வைத்து, ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே தினந்தோறும் அறிக்கை போர் நடந்து வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டார். பதிலுக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் சீன ராணுவம் 600 தடவை ஊடுருவியதாகவும், நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. இந்திய நிலப்பகுதி பறிபோனதாகவும் கூறியிருந்தார்.

சீன ஆக்கிரமிப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்றும் கேள்வி எழுப்பினார். அவர் தனது ‘டுவிட்டர்‘ பதிவில், “சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா?“ என்று கேட்டுள்ளார்.

மேலும், தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியால் எடுக்கப்பட்ட, லடாக்கில் சீனா சர்ச்சையை கிளப்பும் பாங்காங் ட்சோ ஏரி புகைப்படத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று ராகுல்காந்தி மீது தாக்குதல் தொடுத்தார். அவர் கூறியிருப்பதாவது:- முதலில், காங்கிரஸ் கட்சியும், சீன கம்யூனிஸ்டு கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. பிறகு, சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை காங்கிரஸ் ஒப்படைத்தது. டோக்லாம் பிரச்சினையின்போது, ராகுல்காந்தி ரகசியமாக சீன தூதரகத்துக்கு சென்றார்.

முக்கியமான தருணங்களில், ராகுல்காந்தி நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ராணுவத்தின் மனஉறுதியை சீர்குலைக்க நினைக்கிறார். இவையெல்லாம், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராணுவத்துக்கு துரோகம்

இதற்கிடையே, நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும், லடாக் பிரச்சினையை ராகுல் காந்தி எழுப்பினார். அங்கு அவர் பேசியதாவது:-
சீனா, அப்பட்டமாக நமது பகுதியை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இந்திய பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியதை ஏற்றுக்கொண்டதன் மூலம் நமது ராணுவத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார். நமது நிலைப்பாட்டை சீரழித்து விட்டார்.

ஆக்கிரமித்த நிலத்துடன் சீனா தப்பிப்பதை அனுமதிக்கக்கூடாது. நமது வீரர்களின் உயிரிழப்பை வீணடிக்கும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.
மோடி அரசின் வெளியுறவு கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது பழைய நட்பு நாடுகளுடன் உறவை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதா பதிலடி

இதற்கு பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்தியா திறம்பட செயல்படவில்லை, இந்தியா தோற்று விட்டது, பிரதமர் சரண் அடைந்துவிட்டார், ராணுவம் சரணடைந்து விட்டது என்று தினந்தோறும் சொல்வதை காங்கிரஸ் தலைவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்கள் மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாக இருக்கின்றனர்.

இந்தியா தனது நிலப்பகுதியை சீனாவிடம் இழந்துவிட்டது போல் காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் ஒரு அங்குல நிலம்கூட பறிபோகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story