மணிப்பூர் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது! பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்க என்.பி.பி கட்சி சம்மதம் எனத் தகவல்


மணிப்பூர் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது!  பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்க என்.பி.பி கட்சி சம்மதம் எனத் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2020 6:09 PM GMT (Updated: 24 Jun 2020 6:09 PM GMT)

அமித்ஷாவுடனான ஆலோசனைக்கு பிறகு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்க என்.பி.பி கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.  மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருந்தாலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாஜக தனது ஆட்சியை பிடித்தது. 


கடந்த 17-ந்தேதி திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் மிக முக்கிய ஆதரவு கட்சியான மேகாலயா முதல் அமைச்சர் சங்மாவின் தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (4 இடங்கள்), டி.எம்.சி கட்சி (ஒரு இடம்) மற்றும் சுயேட்சையாக ஜிரிபாம் தொகுதியில் நின்று வென்ற எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றனர். ஏற்கனவே மூன்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகினர்.

9 எம்.எல்.ஏக்கள் ஆதரவை இழந்ததால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆதரவு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் மணிப்பூரின் துணை முதல்வரும் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் ஆன ஜாய்குமார் சிங், கேபினட் மந்திரி என். கயிசி, எல். ஜெய்ந்த குமார் சிங், லெட்பயோ ஹயோகிப் ஆகியோர் இன்று டெல்லி சென்றனர்.

அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது மணிப்பூர் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தப்பியுள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக மராட்டிய அரசியலில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வருகிறது.


Next Story