காங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு


காங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு
x
தினத்தந்தி 24 Jun 2020 10:06 PM GMT (Updated: 24 Jun 2020 10:06 PM GMT)

காங்கிரஸ் கட்சியே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.

புதுடெல்லி, 

லடாக் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், லடாக் எல்லையில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும், நமது ராணுவத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துவிட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம் பத்ரா, உண்மையில் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா இழக்கவில்லை என்றார்.

ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி இருப்பதாவது:-

லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல கட்சிகளின் தலைவர்களும் பயனுள்ள கருத்துகளை தெரிவித்ததோடு, மத்திய அரசின் நடவடிக்கைக்கும், ராணுவத்துக்கும் முழு ஆதரவு தெரிவித்தனர். அரசு இதேபோல் உறுதியோடு செயல்படவேண்டும் என்றும் கூறினார்கள்.

அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆனால் வாரிசு அரசியல் நடத்தும் ஒரு குடும்பம் மட்டும் தவறான தகவல்களை தெரிவித்து ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அந்த குடும்பத்துக்கு நாட்டின் நலனின் அக்கறை கிடையாது. நிராகரிக்கப்பட்ட அந்த குடும்பம் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கு சமமாக முடியாது. ஒரு குடும்பத்தின் நலனே இந்தியாவின் நலன் ஆகிவிடாது.

அந்த ஒரு குடும்பத்தின் தவறான அணுகுமுறையால்தான் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை நாம் இழந்தோம். கிட்டத்தட்ட சியாச்சென் மலைப்பகுதி முழுவதும் நம்மிடம் இருந்து போய்விட்டது. இது அனைவரும் ஒற்றுமையாகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.


Next Story