நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணொலி மூலம் நடத்தவேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை


நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணொலி மூலம் நடத்தவேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2020 11:17 PM GMT (Updated: 26 Jun 2020 12:27 AM GMT)

சீன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

சீன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் கூட்ட வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தை சந்திக்க பயந்து, விதிகளுக்கு பின்னால் மத்திய அரசு ஒளிந்து கொள்கிறது.இரு சபைகளின் தலைவர்களாவது, நாடாளுமன்றத்தை தவிர்க்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

இந்தியா-சீனா-ரஷியா இடையிலான முத்தரப்பு மாநாடு, காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, ஜி-20 மாநாடு காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, சீனா தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை ஏன் காணொலி காட்சி மூலம் நடத்த முடியாது? இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் கவுரவ் கோகாய் கூறியதாவது:-

சமூக இடைவெளி உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்தலாம். ஆனால், கேள்விகளை சந்திக்க மனமின்றி, நாடாளுமன்றத்தை சந்திக்காமல் மத்திய அரசு தவிர்த்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முக்கியமான பிரச்சினைகளை விவாதித்து, வியூகம் வகுக்கும் ஒரே தளம், நாடாளுமன்றம்தான். எனவே, சீனா உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும்.

கடந்த 1962-ம் ஆண்டு போரின்போது, அதுபற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஜனசங்க தலைவராக இருந்த வாஜ்பாய் கேட்டுக்கொண்டார். அதை அப்போதைய பிரதமர் நேருவும் ஏற்றுக்கொண்டார். அதேபோன்று இப்போதும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்.

பா.ஜனதாவுக்கும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே 20 ஆண்டுகளாக கட்சி மட்டத்திலான கருத்து பரிமாற்றங்கள் நடந்துள்ளன. ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அமித்ஷா ஆகியோர் பா.ஜனதா தலைவர்களாக இருந்தபோது, சீனாவுக்கு கட்சி பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பி பேச வைத்தது உண்மையா என்று கேட்க விரும்புகிறோம்.

இத்தகைய நெருக்கத்தால், இந்தியா பெற்ற பலன் என்ன? சீனாவுடனான எல்லைப்பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்று நாடு அறிய விரும்புகிறது.

மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவுர்யா தோவல் ‘இந்தியா பவுண்டேசன்‘ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன் சார்பில், சவுர்யா தோவல், சீனாவுடனான கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவரது பங்கு என்ன?

பிரதமர் மோடியின் பேச்சை சீனா பாராட்டுகிறது. சீன ஊடுருவலை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் உள்ளன. எனவே, பிரதமர் மோடியிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story