தேசிய அளவில் கவனம் பெற்ற சாத்தான்குளம் தந்தை- மகன் மரண விவகாரம்


தேசிய அளவில் கவனம் பெற்ற சாத்தான்குளம் தந்தை- மகன் மரண விவகாரம்
x
தினத்தந்தி 26 Jun 2020 5:36 PM GMT (Updated: 26 Jun 2020 5:36 PM GMT)

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ’JusticeForJeyarajAndFenix' என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது

புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 22-ந் தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார்.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக திரைப்பிரபலங்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில்  இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றன. 

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள்ளது. 
குறிப்பாக டுவிட்டரில் ’JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், இந்திய அளவில் இந்த ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ராகுல் காந்தி தனது டுவிட்டில்,  ''போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்றாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் JusticeForJeyarajAndFeni'’ என பதிவிட்டார். 

அதேபோல், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டார்.  சமூக வலைதளவாசிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும்என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story