இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி


இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி
x
தினத்தந்தி 26 Jun 2020 11:00 PM GMT (Updated: 26 Jun 2020 9:10 PM GMT)

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி

புதுடெல்லி, 

லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால், 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-


இந்திய-சீன எல்லைப் பகுதியில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அப்படியானால் அங்கு நமது வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதா? இல்லையா? என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவவில்லை என்று பிரதமர் சொன்னாலும், செயற்கைகோள் படங்களை பார்த்த நிபுணர்கள், அந்த படைகள் இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவியதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

லடாக்கில் சீனா ஆக்கிரமித்த அந்த நிலப்பகுதியை மோடி அரசு எப்போது, எப்படி திரும்பப் பெறப்போகிறது? எல்லை பிரச்சினையில் பிரதமர் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறுவாரா? ராணுவத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து, அதை பலப்படுத்த வேண்டும். அதுதான் உண்மையான தேசப்பற்றாக இருக்கும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

ராகுல் காந்தி

இதேபோல் ராகுல் காந்தி எம்.பி.யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும், ஊடுருவவில்லை என்றும் நீங்கள் (பிரதமர் மோடி) கூறுகிறீர்கள். ஆனால் செயற்கைகோள் படங்கள் கிழக்கு லடாக்கில் 3 இடங்களை சீனா ஆக்கிரமித்து இருப்பதை காட்டுகின்றன. நிபுணர்களும் இதே கருத்தை தெரிவிக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது, இந்திய நிலப்பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று நீங்கள் கூறினால் அது சீனாவின் நிலைப்பாட்டுக்கு சாதகமாகிவிடும்.

எனவே பிரதமர் பயப்படாமல், சீனா நமது நிலத்தை எடுத்துக் கொண்டது என்று நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டும். ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக சீனாவுக்கு எதிராக போராடி அவர்களை விரட்டி அடிப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story